Thursday, September 25, 2014

டெல்லி உயிரியல் பூங்காவில் நடந்தது என்ன?

டெல்லி உயிரியல் பூங்காவில் வாலிபரை கடித்துக் கொன்ற வெள்ளைப்புலி அதன் கூண்டில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு புலி தீவிர கண்காணிப்பிலே வைக்கப்படும் என்று உயிரியல் பூங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 அதற்கு எப்போது அழிக்கப்படும் உணவு புதன்கிழமையும் கொடுக்கப்பட்டது. வெள்ளைப்புலிக்கு எந்த ஒரு மருத்துவ சோதனையும் தேவையில்லை.” என்று பூங்காவின் விலங்குகள் மருத்துவர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சம்பவம் நடைபெற்ற பின்னர் புலி அடைக்கப்பட்டு உள்ள இடத்திற்கு அருகே பார்வையாளர்கள் செல்லக்கூடாது என்று உயிரியல் பூங்கா அதிகாரிகள் கடும் எச்சரிக்கை பிறப்பித்துள்ளனர். 


விலங்குகளுக்கு உணவு அளிக்க வேண்டாம் என்று பார்வையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை ஆண் வெள்ளைப்புலி வெளியே விடப்படவில்லை. அதன் ஜோடி புலியான பெண் புலி மட்டும் பார்வையாளர்கள் பார்க்கும் விதமாக சுற்றிதிரிந்தது. மேலும், உயிரியல் பூங்காவை பராமரிப்பவர்கள் கூறுகையில், ஆண் வெள்ளைப்புலியான விஜய் மிகவும் பண்பான விலங்கு. வாலிபர் புலி அடைக்கப்பட்டு இருந்த அகழிக்குள் குதித்ததும் அவருடன் விளையாடும் மனதுடனே வெள்ளைப்புலி  நடந்துக் கொண்டது. இதற்கு காரணம் என்ன என்பது இது தொடர்பான வீடியோவில் தெளிவாக தெரியவந்துள்ளது. வாலிபரின் அருகே வெள்ளைப்புலி வந்ததும் அங்கிருந்த மக்கள் சத்தம் எழுப்பி மிரள செய்துள்ளனர். மேலும் கற்களை வீசியுள்ளனர். இதுவே புலிக்கு அந்நேரத்தில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. என்று தெரிவித்துள்ளார். 

முதல்கட்ட பிரேத பரிசோதனையில் வாலிபர் மூச்சுத்திணறல் காரணமாகவே இறந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாலிபரின் இடது கழுத்தில் சுமார் 6 ஆழமான காயங்கள் ஏற்பட்டு இருந்தது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. காயம் வழியாக அதிகப்படியான இரத்தம் வெளியேறியுள்ளது. வாலிபரின் எந்த ஒரு பகுதியையும் புலி சாப்பிட வில்லை. என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. மனிதனின் சதையை புலி சாப்பிடாதவரையில் அதனை ஆட்கொல்லை என்று அழைக்க முடியாது என்று டாக்டர் செல்வம் தெரிவித்துள்ளார்.


சம்பவத்தை நேரில் பார்த்த பிட்டூ என்ற பார்வையாளர் கூறும்போது, ‘‘அந்த வாலிபர் அகழிக்குள் தவறி விழுந்து விட்டார். அப்போது அவரை புலி நெருங்கி சென்றது. 15 நிமிடம் அவரை அப்படியே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தது. பார்வையாளர்களும், பூங்கா ஊழியர்களும் புலியின் கவனத்தை திருப்பி, வாலிபரிடமிருந்து ஓட வைத்து விடலாம் என கருதி, கற்களை வீசினர். கூச்சல் போட்டனர். ஆனால் புலி அவரை கவ்வியவாறு இழுத்துச்சென்று கடித்துக் குதறி விட்டது’’ என்றார்.

இதற்கிடையே வாலிபரின் பெற்றோர்கள் உயிரியல் பூங்கா அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இது எனது மகனின் தவறு இல்லை. பாதுகாவலர்கள் அவனை காப்பாற்றி இருக்க வேண்டும். இதுபோன்றவர்களை போலீசார் சிறையில் அடைக்க வேண்டும் என்று வாலிபரின் தந்தைதெரிவித்துள்ளார். ஆனால் வாலிபர் புலியின் அகழிக்குள் குதிக்க முயன்றபோது அவரை தடுத்து நிறுத்த பாதுகாவலர்கள் முயற்சி செய்தனர். என்று பூங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பூங்க சென்ற போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். பூங்கா அதிகாரிகளையும் விசாரித்தனர். இதற்கிடையே வாலிபர் மக்சூத்க்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் அவரது மனைவி கொல்கத்தாவில் உள்ளார். என்றும் போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


0 comments:

Post a Comment