Monday, August 04, 2014

காஸாவிலிருந்து திரும்புகிறது இஸ்ரேல்..!!

படுதோல்வியுடன் காஸாவிலிருந்து திரும்புகிறது இஸ்ரேல்..!!
கடந்த மே மாத இறுதியில் இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட மூன்று இளைஞர்கள் காசா பகுதியில் பிணமாக மீட்கப்பட்டனர். அங்குள்ள ஹமாஸ் போராளிகளே இந்த மரணங்களுக்குக் காரணம் என்று என்று கருதிய இஸ்ரேல் அரசு அவர்கள் மீது
தாக்குதலைத் தொடங்கியது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் இந்தத் தாக்குதலில் பலி எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.
இந்த நிலையில் காசா பகுதியில் செயல்பட்டுவரும் சில இஸ்ரேலியத் தரைப்படைத் துருப்புகளை விலக்கத் தொடங்கியுள்ளதாகவும், மற்றும் சில துருப்புகளை மாற்றியமைத்துக் கொண்டும் இருப்பதாக அந்நாட்டின் ராணுவத் தகவல் தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்திருக்கும் பணியாக இந்த நடவடிக்கையைக் குறிப்பிட்ட லெப்டினன்ட் கர்னல் பீட்டர் லெர்னர் தங்களுடைய தரைப்படை தாக்குதல் நடவடிக்கைகள் முன்புபோல் நடைபெறாது என்று குறிப்பிட்டார். ஆனால் தேவைப்பட்டால் ஹமாஸ் போராளிகளை எதிர்த்து தங்களது அதிரடிப்படை செயல்படும் என்று அவர் கூறினார்.
இஸ்ரேலிய ராணுவம் காசா பகுதியில் தனது தாக்குதல்களை நிறுத்திக் கொள்வதாகவும், வடக்குப் பகுதியில் உள்ள பெய்ட் லஹியா, அல்-அடட்ரா பகுதி மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்குத் திரும்புவதில் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று அறிவித்த ஒரு நாளுக்குப் பின்னர் இவரது அறிக்கை வெளிவந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருப்புகள் வெளியேறுவதை நேரில் பார்த்த பல சாட்சிகள் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். அதுபோல் கான் யூனிஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்தும் வீரர்கள் வெளியேறுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். கடந்த மாதம் 8ஆம் தேதியன்று துவங்கிய தாக்குதலில் இஸ்ரேலியத் துருப்புகள் விலக்கப்படுவது இதுவே முதன்முறையாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment