Wednesday, March 12, 2014

வெளுத்து வாங்கும் மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள்:-


வெளுத்து வாங்கும் மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள்:-
''முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் 2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை நாங்கள் ஆதரித்தோம். கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கினார். 2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இடம்பெற்றோம். அப்போது முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். திருச்சியில் மரியம் பிச்சையை ஆதரித்து பிரசாரம் செய்த போது, 'இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்’ என்று சொன்னார் ஜெயலலிதா. ஆட்சிக்கு வந்து இந்த மூன்று ஆண்டு காலத்தில் எந்த முயற்சியையும் ஜெயலலிதா எடுக்கவில்லை
. இப்போது தேர்தல் வந்துவிட்டதால், 'முஸ்லிம்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார். அவர் இட ஒதுகீட்டை அதிகரித்துத் தருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. முஸ்லிம்களின் வாக்குகளை வளைக்க ஜெயலலிதா விரிக்கும் வலையில் முஸ்லிம்கள் விழ மாட்டார்கள்'' என்று வெடிக்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா.
அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''எல்லா அரசியல் தலைவர்களைப் போலதானே அவரும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இதில் என்ன தவறு?''
''வாக்குறுதி கொடுப்பதில் தவறில்லை. நிறைவேற்ற விருப்பம் இல்லாத அதே நேரத்தில் வாக்குகளை அறுவடை செய்யும் வாக்குறுதிகளால் என்ன பயன்? அ.தி.மு.க. அணியில் ஒரு முஸ்லிம் கட்சிகூட இல்லை. ஆனால், தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி என இரண்டு கட்சிகளுக்கு சீட் தரப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்காது என்பதால் பதற்றத்தில் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் காண்பது பகல் கனவு.
இட ஒதுக்கீட்டை அதிகரித்துத் தர வேண்டும் என்பதோடு திருமண பதிவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தோம். அதை நிறைவேற்றவில்லை. ராஜீவ் வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்வதை வரவேற்கிறோம். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து சட்டசபையில் பேசி வந்தோம். அதைப் பற்றியும் அரசு வாய் திறக்கவே இல்லை. உருது மொழி தேர்வு போன்ற முக்கிய விஷயங்களில் நாங்கள் வைத்த கோரிக்கைகளைக் கிணற்றில் போட்ட கல்லாகதான் இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால்தான் நாங்கள் தி.மு.க. அணியில் இணைந்தோம். ஒருவேளை கூட்டணியில் நாங்கள் தொடர்ந்திருந்தால் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட அவமானம்தான் எங்களுக்கும் ஏற்பட்டிருக்கும்!''

''மதச்சார்பற்ற அணி என்று சொல்லிக்கொள்ளும் தி.மு.க. அணியில் இடம்பெற்ற முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகள் எல்லாம் மதச் சார்புள்ள கட்சிகள்தானே?''
''சிறுபான்மையினரின் நலனுக்காகத் தொடங்கப்பட்ட கட்சிகள் இவை. ஆனால், நாங்கள் தேதி குறித்துவிட்டு யாருடைய வழிபாட்டுத் தலங்களை இடித்ததில்லை. நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை மீறி வழிப்பாட்டு இடங்களை தரைமட்டமாக்கி இருக்கிறோமோ? எங்களை மதச்சார்புள்ள அணி என்றால் எதிரணியினர் யார்? சிறுபான்மையினருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கிற பாதுகாப்பின் அடிப்படையில்தான் அரசுகளும் அவர்களுக்கு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டமே சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கும்போது அவர்களின் நலனுக்காக செயல்பட கட்சிகள் இருப்பதில் என்ன தவறு?''

0 comments:

Post a Comment