Tuesday, January 21, 2014

பாக் – வங்கதேச சிறுபான்மை இந்துக்கள் அடிமைகளா?

”பாரதத்தில் முசுலீம்களுக்கு அனைத்துச் சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் வசிக்கின்ற சிறுபான்மை இந்துக்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இந்துக்கள் தாக்கப்படுகின்றனர்; இந்துக் கோவில்களும் இடிக்கப்படுகின்றன.”
இந்து மதவெறியரின் பிரபல அவதூறுகளில் ஒன்று.
இந்தியாவில் முசுலீம்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் உரிமைகள், சலுகைகள் என்பவை ஏதோ பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளுக்கு வழங்கப்பட்டவை போல ஆர்.எஸ்.எஸ். சித்தரிக்கிறது. முசுலீம் என்றாலே பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள்தான் என்ற உண்மைக்குப் புறம்பான அயோக்கியத்தனமான பிரச்சாரத்தை முதலில் முறியடிக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக முசுலீம் மக்கள் வாழந்து வருகின்றனர். காஷ்மீர் உள்ளிட்ட வட மாநில முசுலீம்களும் பல நூற்றாண்டுகளாய் இம்மண்ணில் வாழ்பவர்கள்தான். இன்றைய உள்துறை அமைச்சர் அத்வானியும், பணக்கார பா.ஜ.க. தலைவர்கள் பலரும்தான் பாகிஸ்தானிலிருந்து ஓடிவந்த அகதிகள்!
இந்தியாவில் இந்து – முசுலீம் மதக் கலவரங்களில் நேற்றும் இன்றும் பாதிக்கப்படுபவர்கள் இரு மதத்தைச் சேர்ந்த ஏழைகள்தான். அதேசமயம். இரு மதத்தைச் சேர்ந்த பணக்காரர்கள் மட்டும் இந்தக் கலவரங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழியைத் தேடுகின்றனர். அதன்படி 1947 பிரிவினையின் போது வடமேற்கு மாநிலம் மற்றும் வங்காளத்தில் உள்ள மேட்டுக்குடி முசுலீம்கள் மட்டும் பாகிஸ்தானுக்கும், பங்களாதேசுக்கும் சென்றனர். அதேபோல அங்கிருந்த பணக்கார – மேல்சாதி இந்துக்கள் மட்டும் கணிசமான எண்ணிக்கையில் இந்தியா வந்தனர். இரு நாடுகளிலும் உழைத்தால்தான் கஞ்சி குடிக்க முடியும் என்ற நிலையிலிருந்த ஏழைகள் மட்டும் இடம் பெயரவில்லை.
பிரிவினைக் காலத்தில் கலவரங்கள் ஏதும் தென்னிந்தியாவில் நடக்கவில்லை. அதனால் இங்கிருக்கும் வசதி படைத்த முசுலீம்களும் இடம் பெயரவில்லை. மேலும் அவர்கள் இதுதான் தமது மண் எனக் கருதியதாலும், பிற மக்களுடன் கொண்டிருந்த நேச உறவினாலும், பாகிஸ்தான் போவது பற்றிச் சிந்திக்கவில்லை. 1947-க்குப் பின் இந்தியாவுடன் இணைக்கப்ட்ட காசுமீர் மற்றும் ஐதராபாத் நிஜாம் சமஸ்தானத்தைச் சேர்ந்தோரும் இடம் பெயரவில்லை. எனவே கலவரம் தூண்டிவிடப்பட்ட வட மேற்கு, வட இந்திய, வங்காள மாநிலங்களில்தான் இடம் பெயர்தல் நடைபெற்றது.
அடுத்து இந்தியாவில் 12 கோடி முசுலீம் மக்கள் பல மாநிலங்களில் பரவலாக வாழ்கின்றனர். மதத்தைத் தாண்டிய மொழி, இன, பண்பாடு, பொருளாதாரக் காரணங்களினால் அந்தந்த வட்டாரத்தோடு ஐக்கியப்பட்டே வாழ்கின்றனர். முசுலீம் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களெல்லாம் வங்க தேசத்திற்கோ, பாகிஸ்தானுக்கோ போக முடியாது. அந்த அளவுக்கு வாழ்வியல் – சமூகவியல் – அரசியல் வேறுபாடுகள் இருக்கின்றன.
ஆனால், பாகிஸ்தானில் வாழும் இந்துக்களிடையே இத்தகைய வேறுபாடுகள் இல்லையென்றாலும் வாழ்க்கை நிலைமை இடம் பெயருவதற்கு உகந்ததாக இல்லை. அங்கே சிந்து மாகாணத்தில் குறிப்பாக லாகூரைச் சுற்றிய பகுதிகளில் சுமார் 13 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். அதிலும் 70 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட மக்களாகவே இருக்கின்றனர். ஆய்வாளர் அஸ்கர் அலி என்ஜினியர் ஒரு முறை லாகூருக்குச் சென்றிருந்தபோது தெருக்கூட்டும் தாழ்த்தப்பட்ட தொழிலாளி ஒருவரிடம் ‘நீங்கள் ஏன் பிரிவினையின் போது இந்தியா செல்லவில்லை’ எனக் கேட்கிறார். ”இங்கேயும் தெரு கூட்டுகிறேன். இந்தியா சென்றாலும் அதைத்தான் செய்யப் போகிறேன். இதற்கு எங்கே இருந்தால் என்ன?” என்று பதிலளிக்கிறார் அந்தத் தொழிலாளி. அவரைப் பொறுத்தவரை வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் மதத்திற்குப் பங்கு ஏதுமில்லை. ஏழ்மைக்கு ஏது மதம்?
இப்படி ஏழ்மையில் உழலும் இத்தாழ்த்தப்பட்ட ‘இந்துக்கள்’ அங்கே தாக்கப்படுவதற்கு ஆதாரமும் கிடையாது; அடிப்படையும் கிடையாது. இந்தியாவைப் போல அங்கும் பெரும் கலவரங்கள் நடந்ததாகப் பார்ப்பனப் புளுகுணி தினமலரில் கூட செய்தி வந்ததில்லை. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகுதான் எதிர்விளைவாக பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் இந்துக்களுக்கு எதிரான கலவரங்கள் தொடங்கின. இருந்தபோதும் அப்படிக்  கலவரம் செய்தமைக்காக இரு நாடுகளைச் சேர்ந்த பல இசுலாமிய வெறியர்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்செய்தி இந்தியப் பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. ஆனால், இங்கே மசூதியை இடித்த கரசேவகர்கள் யாரும் சுடப்படவில்லை என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.
பாகிஸ்தானில் தாக்கப்படும் தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்காக பா.ஜ.க. கும்பல் முதலைக் கண்ணீர் விட வேண்டாம். ஏனெனில் இங்கிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் – இந்திய இந்துக்களால் தாக்கப்படுவதைவிட பாகிஸ்தான் இந்துக்களின் நிலைமை பரவாயில்லை. மற்றபடி இந்தியப் புவியியல் எல்லையை புனிதம் கொண்டாடும் இந்து மதவெறியர்கள் நினைப்பது போல் வாழ்வியல் நிலைமைகள் மதத்தை வைத்து மட்டும் சிக்கலாகவில்லை.
உலகிலேயே இலட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்த இப்பிரிவினை அந்த அளவுக்கு சோகத்தையும், பிரச்சனைகளையும் கொண்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற முசுலீம்கள் ‘முஜாகிர்கள்’, வந்தேறிகள் என்றழைக்கப்படுகின்றனர். அதன்படி அவர்களுக்குரிய உரிமைகளும், வாய்ப்புகளும் இன்றுவரை மறுக்கப்பட்டே வருகின்றன. அவர்களும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுடன் ஆயுத மோதலை நடத்தி வருகிறார்கள்.
இருநாட்டு எல்லையில் வாழும் மக்களும் இரு நாட்டுப் போர்களினால் அடைந்த துயரங்கள் அளவில் அடங்கா. இராணுவச் சண்டையினால் தேசியம் மாறுவதும், எல்லை தாண்டி இயங்கிவரும் மண உறவுகளும் – அதைத் தொடர முடியாத அரசுத்தடைகளும் அங்கே இயல்பானவை. பிரிவினையின்போதும், பின்னர் நடந்த 3  போர்களினாலும் இலட்சக்கணக்கான இந்துக்கள் இங்கே வந்திருக்கின்றனர். முசுலீம் நிலவுடைமையாளர்களின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்களோடு சேர்ந்து அடிமைப்பட்டிருந்த இராஜபுத்திரர்கள், இந்தியா வந்தவுடன் தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஆளும் உண்மையான இராஜபுத்திரர்களாக மாறிவிட்டனர். எனவே பிரிவினை என்பது இரு நாட்டிலிருந்தும் இடம் பெயர்ந்த உழைப்பாளிகளான முசுலீம்களுக்கும் இந்துக்களுக்கும் பொன்னான வாழ்க்கை எதையும் வழங்கவில்லை.
பாகிஸ்தான், வங்கதேசம் இரண்டும் தங்களை இசுலாமியக் குடியரசுகள் என அறிவித்துக் கொண்டவை. அதன்படி மாற்று மதங்களைச் சேர்ந்தோர் அங்கே சட்டபூர்வமாகவே இரண்டாந்தரமாயக் கருதப்படுகின்றனர் என்பதும் உண்மைதான். மதக்குடியரசு தவறு என்று கருதும் நாம் அதை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டியதில்லை.
மேலும் மதத்தின் பெயரிலான எந்தவொரு அரசும் தனது நாட்டுச் சிறுபான்மை மத மக்களை ஒடுக்கப் பயன்படுவதைக் காட்டிலும் தன் மதத்துப் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஏய்க்கவும் ஒடுக்கவுமே பயன்படுகிறது. இந்து மதவெறியர்கள் – கிறித்துவ, உழைக்கும் மக்களுக்கும் எதிரிகள் என்பது எப்படி உண்மையோ அப்படி ஒரு இசுலாமியக் குடியரசு, அந்நாட்டு முசுலீம் உழைக்கும் மக்களுக்கும் விரோதியாகத்தான் இருக்கிறது.
பாகிஸ்தான் – வங்க தேசத்தில் சட்டப்படியும், இந்தியாவில் சட்டமின்றியும் பெரும்பான்மையினரின் மதவாதம் இருந்து வருகிறது. ஆயினும் இந்தியாவில் ஆயிரமாயிரம் முசுலீம்கள் கொல்லப்பட்ட போதும், மசூதி இடிக்கப்பட்ட போதும் வளைகுடாவில் பிழைக்கப் போன இந்துக்களைக் கேட்பார் இல்லாமல் தாக்கியிருக்கலாமே? ஏன் அப்படி நடக்கவில்லை?
வங்க தேசத்தில் இந்துக்களைத் தாக்கிய முசுலீம் மதவெறியர்களை எதிர்தத்து ‘லஜ்ஜா’ (அவமானம்) என்ற நாவலை எழுதினார் தஸ்லிமா நஸரீன். அதனால் மதவாதிகள் அவருக்கு மரணதண்டனை அறிவித்து நாட்டை விட்டு விரட்டினாலும் தஸ்லிமா தனது போராட்டத்தைக் கைவிடவில்லை.
‘பம்பாய்’க் கலவரத்துக்குக் காரணம் பால் தாக்கரேதான் என்று பத்திரிகைகளும், நீத மன்றமும், வரலாறும் நிரூபித்திருக்கின்றன. ஆனால், பம்பாய்க் கலவரம் நடந்த புழுதி மறைவதற்குள் ‘பம்பாய்’ திரைப்படத்தின்மூலம் வரலாற்றை மாற்றி, முசுலீம்கள்தான் காரணம் என்று கதை சொல்லி, பால் தாக்கரேவிடம் ஆசியும், அனுமதியும் வாங்கினார் மணிரத்தினம். மாநில, தேசிய விருதுகள், த.மு.எ.ச. உள்ளிட்ட ‘மதச்சார்பற்ற’ அறிஞர்களின் பாராட்டு, தொலைக்காட்சிகளில் 3 மாதத்திற்கு ஒரு முறை ஒளிபரப்பு என ‘பம்பாய்’ படத்துக்குக் கிடைத்த சீராட்டும், பாராட்டும் பட்டியலிட்டு மாளாது.
வங்கதேசம் இசுலாமிய நாடு என்றாலும் ஒரு தஸ்லிமா நஸரீனுக்காக அந்நாடு பெருமைப்பட முடியும். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று கூறிக்கொண்டாலும் ஒரு மணிரத்தினத்துக்காக நாம் வெட்கப்படவே இயலும்.

0 comments:

Post a Comment