
சர் சையது அகமது கான். மேற்கத்திய அறிவியல் கல்விதான் இந்தியாவின் இன்றியமையாத தேவை என்று வலியுறுத்திய மிகச் சில இந்திய ஆளுமைகளில் ஒருவர். மே 24, 1877-ம் ஆண்டு தான் நிறுவிய, ‘முகம்மதன் ஆங்கிலோ ஓரியண்டல் காலேஜ்’ எனும் கல்லூரியின் வளர்ச்சிக்காகவே உடல் பொருள், ஆவியை தியாகம் செய்தவர். அந்தக் கல்லூரிதான் உத்தரப் பிரதேசத்தின் அலிகர் நகரில் இன்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமாக உருவெடுத்து நிற்கிறது.
இந்தியாவின் பழமையான மத்தியப் பல்கலைக்கழகமான இதில், முஸ்லிம்களுக்கு மட்டும்தான் அனுமதி என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். வட இந்தியாவின் மதநல்லிணக்கச் சின்னமான இங்கு 1881-ல் பட்டம் பெற்ற முதல் மாணவர் பாபு ஈஸ்வரி பிரசாத் என்ற இந்து. இங்கு முஸ்லிம்களுக்கென்று தனியாக இடஒதுக்கீடு குறித்து 1980-களில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கு தற்போது உச்ச நீதிமன்ற அமர்வின் நிலுவையில் உள்ளது. முஸ்லிம்கள் இடைக்கால நாகரிகம் மற்றும் கோட்பாடுகளில் இருந்து மாறாமல் இருந்த காலம் அது. இவர்களில் பெரும்பாலானோர், உலகில் நிகழ்ந்துவரும் மாற்றத்தை உணராமல், நாளை வரப்போகும் நவீன உலகை எதிர்கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். இந்துக்கள், முஸ்லிம்களைவிட அப்போது முன்னேறியிருந்தனர். 1857-ன் துயர நிகழ்ச்சியைத் தொடர்ந்து சர் சையது அகமது கான் கல்வியின் தேவையை உணர்ந்தபோதும், கல்வியை ஓர் இயக்கமாக மாற்ற சில காலம் ஆயிற்று. இதைத்தான், அலிகர் இயக்கம் என நாம் வரலாற்று பாடங்களில் படிக்கிறோம்.
மதரசா என்றாலே முஸ்லிம்கள் மட்டும் பயிலும் இடம் என இன்றைய நிலை உள்ளது. ஆனால், இந்த நிலை காலத்தால் ஏற்பட்ட மாற்றம்தான். இடைக்கால இந்தியாவில், மதரசாக்கள் வெறும் கல்வி நிலையங்களாக மட்டுமே கருதப்பட்டன. அவற்றில், சாதி, மதப் பாகுபாடின்றி முஸ்லிம்கள், இந்துக்கள் என அனைவருமே கல்வி பயின்றனர். இந்நிலையில், தான் வகித்த அரசுப் பணிக்காக 1859-ல் முராதாபாத் சென்ற சர் சையது, அங்கு பாரசீக மதரசாவைத் தொடங்கினார். அவருடைய கல்வி இயக்கத்தின் முதல் பணியில், இந்துக்களும் முஸ்லிம்களும் பயன்பெறும் வண்ணம் உருது, அரபி,பாரசீகம், சம்ஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளையும் கற்பிக்க ஏற்பாடு செய்தார். இதன் தொடர்ச்சியாக உருவானதுதான் இன்றைய அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்.
சுமார் 467.6 ஹெக்டேர் பரப்பளவில் உறைவிடப் பல்கலைக்கழகமாக விரிந்திருக்கும் அலிகர் பல்கலைக்கழக வளாகத்தில், தொடக்கப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி, அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி, பலதொழில்நுட்பக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மற்றும் பெண்களுக்கென்று தனியாகக் கல்லூரி உட்பட 38 நிறுவனங்கள் இருக்கின்றன. 37,804 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் 300 பேர் வெளிநாட்டு மாணவர்கள். 109 துறைகளில் 2000 ஆசிரியர்கள் மற்றும் 7540 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒருகாலத்தில் நூற்றுக் கணக்கான தமிழர்களும் பயின்றுவந்தார்கள். இன்றைக்குத் தமிழகத்தில் முக்கியமான கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் திருச்சி ஜமால் முகம்மது, புது கல்லூரி, கீழக்கரை கல்வி நிறுவனங்கள் போன்ற பல நிறுவனங்களின் முன்மாதிரி அலிகர் பல்கலைக்கழகம்தான். இந்து தேசியவாதியான மதன் மோகன் மாளவியாவும், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைப் பார்த்து காசியில் தொடங்கியதே பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்.
இந்திய தேசிய காங்கிரஸ் 1885-ல் தொடங்கப்பட்டு, நாடு முழுவதும் இவ்வியக்கத்தைப் பரப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. இதை, சையது மட்டும் ஆதரிக்கவில்லை. காங்கிரஸின் மூன்றாவது மாநாடு 1887-ல் சென்னையில் நடந்தது. இதில், கலந்துகொள்ள வேண்டாம் என சையது முஸ்லீம்களை கேட்டுக்கொண்டார். இதற்குச் சரியாக 30 ஆண்டுகளுக்கு முன் (1857-ல்) ஏற்பட்ட சிப்பாய்க் கலவரத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அதன் தொடர்ச்சியாக ஆங்கில அரசால் பழிவாங்கப்பட்ட நிலையில், “சமூகத்தில் பின்தங்கியுள்ள முஸ்லிம்கள் போராட இது சரியான நேரம் அல்ல. அவர்கள் கல்வி மேம்பாட்டில்தான் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டும்” எனக் காரணம் கூறினார் சையது. ஆனால், அந்த காங்கிரஸ் மாநாட்டில் முஸ்லிம்களும் கலந்துகொண்ட போதும், பெரும்பாலான இந்துக்களும் சையதின் கருத்தை ஆதரித்தனர்.
சையது இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். பொதுவாக, தங்களுடைய கல்விக்காகவே இந்தியர்கள் இங்கிலாந்து செல்லும் காலம் அது. ஆனால், இங்கிலாந்து கல்வியை நமது மக்களுக்குத் தருவதற்காக அங்கு செல்ல வேண்டும் என நினைத்தார் சையது. தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்கே தந்தார். உண்மையான முன்னேற்றமும் சமூக விடுதலையும் கல்வியின் மூலமே சாத்தியம் என்று அவர் நம்பியதைப் பறைசாற்றுகிறது அலிகர் பல்கலைக்கழகம்.
(சர் சையது அகமது கானின் 196 ஆவது பிறந்த நாள் அக்டோபர் 17.)
நன்றி
தி ஹிந்து
0 comments:
Post a Comment