Friday, January 17, 2014

கவித்துவத்தால் உலகை அதிரவைத்த மகாகவி அல்லாமா இக்பால்




கலாநிதி அல்லாமா இக்பால் உலகம் போற்றும் கவிஞர். தூங்கிக் கிடந்த மனித உள்ளங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்பி பேனா முனையில் செயலூக்கம் கொடுத்த அவரின் படைப்புகள் காலத்தால் அழியாதவை.
மனிதத்தின் நோக்கம் அறியாதிருந்த சமூகத்தை ஓர் இலட்சியவாத சமூகமாகக் கட்டமைக்க அரும்பாடுபட்டவர்தான் கவிஞர் அல்லாம இக்பால்.
தற்போதைய பாகிஸ்தானின் (முன்னைய இந்தியா) பஞ்சாப் மாநிலத்தின் ஸியால்கோட் நகரில் 1877 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 ஆம் திகதி இக்பால் இப்பூவுலகின் தென்றல் காற்றைச் சுவாசிக்கலானார்.
"கவிஞன் என்பான் பிறப்பவன், உண்டாக்கப்படுபவனல்லன்" என்ற கூற்றை முழுமையாக நிரூபித்துக்காட்டினார். இக்பால் பள்ளிப்பருவத்திலேயே கவி புனைவதிலும் கவி பாடுவதிலும் அதிக திறமைகாட்டினார்.

குறுகிய காலத்திலேயே அவரது மொழிப்புலமையையும் சொல் வீச்சையும் கண்ட பிரபல கவிஞர் மிர்சா தாக் "இக்பாலின் கவிதைகள் திருத்தத்தையோ, மீள் பரிசீலனையையோ வேண்டாதவை" என்றார்.
சேர் தோமஸ் ஆனல்டின் வழிகாட்டலின் கீழ் இக்பால் மேலைத்தேய கலாசார நாகரிகங்கள் பற்றியும் தத்துவ சாஸ்திரம் பற்றியும் கற்றுத் தேர்ந்தார்.
1894 ஆம் ஆண்டுகளில் இக்பால் தனது எம். ஏ. பட்டப்படிப்பின் பின்பு லாகூரில் ஒன்றன்பின் ஒன்றாக இரு அரச கல்லூரிகளில் பேராசிரியராகக் கடமையாற்றினார்.
இக்காலம் ‘பொருளாதாரக் கல்வி’ என்றொரு நூலையும் எழுதினார். இதனைத் தொடர்ந்து கவிஞருக்கு தமது மேற்படிப்பைத் தொடர்வதற்கு மேநாடு செல்லும் வாய்ப்புக்கிடைத்தது.
அவர் இங்கிலாந்து சென்று அங்கு பரிஸ்டர் படிப்பிலும் தத்துவஞான ஆய்வுகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பின்னர் கேம்பிரிட்ஜ் டிரின்டி கல்லூரியில் இணைந்து இரண்டு வருடங்களில் கலாநிதிப் பட்டமும் பெற்றார்.
இக்பால் ஆரம்பத்தில் மார்க்க அறிவைப் பெற்றிருந்ததால் ஈமானிய உணர்வும் ஆன்மிக ஈடுபாடும் அவருள் அடர்த்தியாகவே வேர்விட்டிருந்தன. இதனால்தான் அவர் ஐரோப்பாவின் கேம்ரிட்ஜ், மியுனிச் பல்கலைக்கழங்களில் கற்றுத்தேறினாலும் மேலைத்தேயம் என்ற இயந்திரத்தில் முஸ்லிம் மூளைசாலிகள் சலவை செய்யப்பட்டபோதும் இஸ்லாமிய அடித்தளத்திலிருந்து அவரால் சற்றும் பிசகாதிருக்க முடிந்தது. அவரது வார்த்தைகளிலேயே அதனை அவர் இவ்வாறு கூறுகின்றார்.
"அறிவு என்தலையில் சிலைகள்கொண்ட
ஒரு கோயிலைக் கட்டியெழுப்பியது
- ஆனால்
இப்றாஹீமை ஒத்த அன்பு
அச்சிலைகளின் வீட்டை
ஒரு கஃபாவாக மாற்றியது"
ஐரோப்பாவில் இருந்துகொண்டு ஆசியாவைப் பார்த்த இக்பாலுக்கு அங்கு அப்பிக்கிடந்த இருள் நன்கு புலனுட்பட்டது. அதனை அகற்றி ஒரு தீப்பந்தம் ஏற்றவேண்டியதன் அவசியத்தை தனது பேனா முனையால் வார்த்தெடுத்தார்.
மேற்கின் அறிவியலும் விஞ்ஞான முன்னேற்றமும் இஸ்லாத்தின் ஆன்மிகமும் ஒருசேர எழுச்சிபெறவேண்டும் என்பதில் அவர் அவாவி நின்றார். கிழக்கில் இருள் படிந்துள்ளது பற்றி அவர் தனது நண்பர் அப்துல் காதிருக்கு எழுதியதொரு கவிமடலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
"எழுங்கள், கிழக்கின் அடிவானில்
இருள் கப்பிக்கொண்டுள்ளது.
நம் நெருப்பெழும் குரலால்
(தூங்கும்) அவையில் விளக்கேற்றுவோம்"
மேநாட்டுப் படிப்பின் பிற்பாடு 1908 ஆம் ஆண்டு இக்பால் இந்தியா திரும்பி சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
இதன்போது தன் ஆன்மிகத்தை உரமூட்டவும் மக்களைத் தட்டியெழுப்பி புத்துணர்வூட்டவும் ‘அன்ஜுமானே ஹிமாயத்’ என்ற இஸ்லாமியப் புத்திஜீவிகளின் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பல சேவைகளில் ஈடுபட்டார். 1919 ஆம் ஆண்டு அதன் பொதுச் செயலாளராகவும் தெரிவானார்.
விரிந்த இலக்கிய உலகில் தனது கவித்துவப் படைப்பாற்றலால் முழு உலகையுமே அதிரவைத்தவர்தாம் கவிஞர் அல்லாமா இக்பால். சமூகத்தின் எழுச்சிப் பிரளயமாகவே இவரது கவி வீச்சுக்கள் அமைந்துள்ளன.
கருத்தாழமுள்ள, தத்துவார்த்தமான பல கவித்தொகுப்புக்களையும் ஆய்வு முடிவுகளையும் இவ்வுலகுக்கு யாத்துத் தந்துள்ளார்.
இக்பால் 1903 இல் முதன் முதலாக ‘இல்முல் இக்திஸாத்’ பொருளாதாரக் கல்வி என்ற உருது மொழியிலான நூலை எழுதினார். அவர் தனது முதலாவது கவிதைத் தொகுப்பான ‘அஸ்ராரே குதி (இதயப் புதையல்)’ என்ற தொகுப்பை 1915 ஆம் ஆண்டில் பிரசவித்தார்.
அதன்பின் ‘ரூமூஸே பிகுதி (உள்ளத்தை இழப்பதன் இரகசியம்)’ என்ற நூலை 1917 இலும் 1923 இல் ‘பயாமே மஷ்ரிக் (கிழக்கின் செய்தி)’ என்ற நூலையும் ‘ஸபூரே அஜம் (கிழக்கின் செய்தி)’ என்ற நூலை 1927 இலும் ‘ஜாவித் நாமா (இக்பாலின் இளைய மகனின் பெயர்.
பாரகத்தில் ‘நித்தியத்துவம்’ என்று பொருள்)’ என்ற நூலை 1932 இலும் பஸ்-சாய்-பாயத்-கர்த் அக்வாமே ஷர்க்’ என்ற நூலை 1936 இலும் மற்றும் ‘அர்முகானே ஹிஜாஸ்’ என்ற தொகுப்பை 1938 இலும் எழுதி வெளியிட்டார். இவை பாரkக மொழியிலான கவி நூற்களாகும்.
முதலாவது உருது மொழிக் கவிதையான ‘பாங்கே தாரா (பாலைவன மணியோசை)’ஐ 1924 ஆம் ஆண்டு வெளியிட்டார். இது உலகப் பிரசித்திபெற்ற ஒரு கவிதை. அதனைத் தொடர்ந்து 1935 இல் ‘பாலே ஜிப்ரீல்’, 1936 இல் ‘ஸ்ர்மே கலின்’ போன்ற நூற்களையும் எழுதினார்.
இக்பால் பல மொழிகளிலும் விற்பன்னராக முகிழ்ந்தார். அரபு, பாரkக மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவாறே பின்பு ஆங்கிலம், பிரஞ்சு போன்ற மொழிகளிலும் புலமைபெற்றார். தனது தாய் மொழியில் மாத்திரம் அவரது சொல்லாட்சி நயக்கவில்லை.
ஆங்கிலத்திலும் சொற் புலமைகண்ட விற்பன்னராகத் திகழ்ந்தார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய இரு நூல்கள் அம்மொழியிலான அவரது புலமையைக் காட்டுகின்றன.
ஆரம்பமாகவே பாரkக மொழியில் புலமைபெற்ற இக்பால் அத்துறையிலும் கவிதை எழுத முனைந்தார். பாரkக மொழி பல பெரிய கவிஞர்களால் வளப்படுத்தப்பட்ட மொழி.
அது மெருகேற்றப்பட்ட வார்த்தைகள் சொரியும் மொழி. தனது தத்துவார்த்தக் கருத்துக்களை அழகுததும்ப மொழிய மிகப்பொருத்தமான மொழி அதுதான் என்பதை நன்குணர்ந்து பல கவிதைத் தொகுப்புகளை அப்பாரkக மொழியிலேயே எழுதியுள்ளார்.
ஈரானியர்கள் இக்பாலைத் தமது மொழிக்கு வளம் சேர்த்து உரமூட்டிய புலவராகக் கருதுகின்றனர்.
இக்பால் தேசியத்துக்குள் சுருங்கிய, ஒரு துறையோடு மாத்திரம் ஒதுங்கிய கவிஞரல்லர். அவர் உலகறிந்த :wரி’>சியக் கவிஞர். பலராலும் மெச்சப்படும் அறிஞர்.
மாபெரும் அறிஞர்களாக மதிக்கப்படும் மெளலானா மெளதூதி, மெளலானா அபுல் ஹஸன் அலி நத்வி, மெளலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி, முப்தி முஹம்மத் ஷபீஹ், அல்லாமா பின்னூரி மற்றும் ஷஹீத் ஸெய்யித் குதுப் என பல அறிஞர்களாலும் ஆகர்சிக்கப்பட்டவர் தாம் கவிக்கோ அல்லாம இக்பால்.
கவிஞரின் அல்குர்ஆனுடனான தொடர்பைக் கண்ட மெளலானா அபுல் ஹஸன் அலி நத்வியவர்கள் அவரை ‘ஷாஇருல் குர்ஆன்’ "அல்குர்ஆனியக் கவிஞர்" என வர்ணிக்கிறார்.
"உலகம் முழுவதும் பிரசித்திபெற்ற குறிப்பாய்க் கூறத்தக்க ஒரு கவிஞர்தான் இக்பால்" என முஹம்மத் அலி ஜின்னாஹ் அவர்கள் இக்பாலைப் பாராட்டியுள்ளார்கள். ‘அஸ்ராரே குதி’ கவிதை நூலின் ஆங்கில மொழியாக்கத்தைப் படித்த மேநாட்டு கவித்தலைகள் "இக்பால் கீழ்நாட்டின் இணையற்ற தத்துவ சாஸ்திரக் கவிஞர்" என்று பாராட்டினர்.
முஸ்லிம் சமூகத்தின் அடித்தளத்தின் இயக்கவியல் அசைவுபற்றி அல்லாமா இக்பால் பெரிதும் சிந்திதுள்ளார்கள். ஒரு கவிப்புரட்சியின் மூலம் மக்களைச் செயலாற்றுவதின்பால் தீவிரப்படுத்தினார்கள். இக்கொள்கை அவரது கவிதைகளில் இலையோடியிருப்பதைக் காணலாம்.
"தனிமனிதன் ஒரு சமூகத்தின் அங்கமாகவே இருக்கின்றான்
தனித்த நிலையில் அவன் ஒன்றுமே இல்லை
அலைகள் சமுத்திரத்தில்தான் அலை மோதுகின்றன
சமுத்திரத்திற்கு வெளியில் அது வெறுமையே!"
சமூகக் கட்டுப்பாடு, மனித நேயம், இஸ்லாமிய சமூக ஒழுங்கு, ஜனநாயகம், சர்வாதிகாரம், பொதுநலவாயக் கோட்பாடுகள், தேசியவாதம், இஸ்லாத்தில் பெண்களுக்குள்ள உயர் உரிமைகள், கல்வியின் முக்கியத்துவம், நவீனம், கலை, இலக்கியம் என சமூக, பொருளாதார, சமய, கலாசார அம்சங்களை மனித சமூகத்துக்கு விட்டுச்சென்றுள்ளார்.
அல்லாமா இக்பால் தமது அந்திம காலத்தில் மரணப்படுக்கையில் இருந்தவாறு மரணம் பற்றி இவ்வாறு கூறினார்.
"உண்மை விசுவாசியின் அடையாளத்தை
நான் சொல்கிறேன்
மரணம் வரும் காலையில்
அவன் வதனம் மலர்ச்சியுற்றிருக்கும்" என்றார்.
அந்நாள் 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உலகம் போற்றும் சர்வதேசியக் கவிஞர் கலாநிதி இக்பால் தனது 65 ஆம் வயதில் லாகூரில் உயிர் நீத்தார். எளிமையாகவும் பணிவாகவும் வாழ்ந்தவர்.
தன்னை பக்கீர் (ஏழை) என்றே அழைத்துக்கொண்டார். கவிஞன் என்று தன்னைப் பிரஸ்தாபிப்பதை அவர் விரும்பவில்லை. அவரது கவிதைகள் இன்றும் தூங்கிக்கிடக்கும் உள்ளங்களை உசுப்பி விடுபனவாய் உள்ளன.
இக்பால் மறைந்துவிட்டார். எனினும் அவரது ஜனனக் கவிதைகளால் இன்றும் ஜீவிக்கின்றார். அவரது கவிதைகளில் ஊறும் இன்ப நாதத்திலும் பொருள் வேகத்திலும் அற்புத நர்த்தனம் புரிகின்றார். ஒவ்வொரு முறையும் தம்கவிதைகளால் புதிதாய் ஜனனிக்கிறார் அந்த மகாகவி.
எல்லமுல்ல ஆலிப்அலி... -

0 comments:

Post a Comment